Thursday, 22 February 2018

புகழ்

கலைஞனுக்கு பாராட்டும், 
வாழ்த்துக்களும் மட்டுமே பிடிக்கும். 
நல்ல தலைவன் இவற்றை விரும்ப மாட்டான்.
முகஸ்துதிக்கு மயங்க மாட்டான்.
மாறாக இவற்றின் பின்னால் போகும் 

தலைவனின் தொண்டர்கூட்டம் 
அவனை நம்பினால் அழிந்து போகும்.

Tuesday, 13 February 2018

எதிரியை நேசி

உறவுகள் "உச்சு" மட்டுமே கொட்டும்.
நட்புகள் நடப்புகளை விமர்சிக்கும்.
துரோகம் முதுகில் குத்தும்.
எதிரி ஒருவனே உன்னை
வெற்றிப்படிகளில்
ஏறிச்செல்ல
உந்தும் உந்துவிசை.


எதிரியென ஒருவன் இல்லையேல்
உன் முன்னேற்றம் ஆமை வேகத்தில்
மட்டுமே இருக்கும்.


Wednesday, 24 January 2018

பொருத்தமான தம்பதி


அவனோ கேடுகெட்டவன்,
நல்லவன் போல் பண்பாய் பேசி நடிப்பான்.
அவளோ அவன் கேடுகெட்ட
குணத்தை நன்கு தெரிந்தும்,
ஏதும் தெரியாதது போல்,
அவன் கூறியதை நம்புவதாய்
அவனை நம்ப வைக்கிறாள்.
இல்லறம் இனிதே செல்கிறது.
கலியுக தம்பதி...

Friday, 1 December 2017

விண்ணுலக பயணம்


முப்பாட்டன்கள் போனதாக சொன்னார்கள்.
தாத்தா, பாட்டி நன்கு விபரம் தெரியும் முன்னே சென்றார்கள்.
பெரியப்பா, பெரியம்மாவும் சென்றார்கள்.
அப்பா, அம்மா விபரம் தெரிந்த பின் சென்றார்கள்.
சித்தப்பாவும் அவர்களுடன் சேர்ந்துகொண்டார்.

பிறகு அண்ணன்கள்...
இடையிடையே நண்பர்கள்...
நான் நேசித்த ஒரு சில உயிரினங்கள்.

நாளை நான் மற்றும் நீ...
இது விரும்பினாலும், விரும்பா விட்டாலும்
பயணம் நிரந்தரமானது.
பிரிவு, மாற்றம் என்பது நிலையானது.
பிரிவு என்றும் நம்மை விட்டு பிரியாது.

Wednesday, 29 November 2017

பணக்கட்டு


பணக்கட்டு விழித்திருக்கும்போது,
சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 

சில வழக்கு கோப்புகள் உறங்குகின்றன...
பல கோப்புகள் கோமாவிலேயே  கிடக்கின்றன.


Sunday, 26 November 2017

Thursday, 2 November 2017

பெரியகாரியம்


எத்தனையோ பெரியகாரியம் (இறந்தவர்கள் வீட்டிற்கு )
சென்றோம்.
நாம் நிரந்தரமாக உறங்கும்போது (இறந்து போதல்)
அவர்கள் யாரும் வரப்போவதில்லை...

பகலில் எரிப்பதற்கு ஒரு விலை.
மதியம் எரிப்பதற்கு அதிகம்.
இரவு எரிப்பதற்கு மிகவும் அதிகம்.
பிணத்திற்கு கூட பணம் இருந்தால்தான் மதிப்பு.

Tuesday, 3 October 2017

சாபம்


சாபம் என்பது நாம் ஒருவருக்கு செய்யும் தீங்கிற்க்கு,
அவர் வயிறெரிந்து கூறும் வார்த்தை மட்டும் சாபம் ஆகாது.
நாம் செய்யும்  பாவம் அவர் ஏதும் கூறாமல் விட்டு சென்றாலும்,
ஒரு நொடிப்பொழுது அவர் உள்ளம் துடித்தாலே போதும்.
நம் தலைமுறை அனைத்தும் துடிதுடித்து துன்பம் அனுபவிக்கும்.
அதை நாம் நெஞ்சுபதற சாகும்வரை அனுபவிக்க நேரிடும்.
இன்று பணத்தின் போதையில் எல்லாம் மயக்கமாக..., ஏளனமாக இருக்கும்.
எவ்வளவு கதறினாலும் கடவுள் கைகட்டி வேடிக்கை மட்டுமே பார்ப்பார்.
காலம் பதில் சொ(கொ)ல்லும்போது வலி மிகவும் அதிகமாக இருக்கும்.

Thursday, 21 September 2017

என்னவள்


சுறுசுறுப்பானவள் நீ.
புத்திசாலித்தனம், 

சிலநேர சமயோஜிதமும்
உன்னிடம் என்னை வியக்க வைத்த 

விடயங்கள் பலமுறை.
உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும்.
 

அதனால்தானோ என்னவோ, 
நீ சில சமயத்தில் எத்தனை முறை கொட்டினாலும்,
நான் அந்த வலியில் இன்பமடைகிறேன்
.

Friday, 11 August 2017

ஏளனம்(மனசாட்சி)


என் வக்கத்த நிலையைக் கண்டு,
என்னைப்பார்த்து கைகொட்டி (சிரித்தும்), சிரிக்க உலகமே காத்திருக்கு.
உலகமும் நீயும் ஒன்றா?
இதில் நீ வேற...
என்ன கொடிமை...?


Saturday, 22 July 2017

இணையம் குடி பேரழிவை நோக்கி இந்தியா


இணையதளத்தில் மிகுந்த பயனுள்ள வசதிகள் இருப்பது நிதர்சனமான உண்மை.
மேலும் ஒருசில வெளி நாடுகளில் ஆபாச இணையதளங்கள் வராதவாறு முடக்கியுள்ளனர்.
அது நாட்டிற்கு ஆரோகியமான விஷயம்.
நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவரானதும், தமிழ் திரைப்படங்கள் திருட்டுத்தனமாக ஒளிபரப்பி வந்த இணையதளங்கள் சிலவற்றை இந்தியாவில் முடக்கப்பட்டன.
இதுவே  சாத்தியமான போது இந்தியாவில் ஆபாச இணைய தளங்களை முடக்க முடியாதா?

தமிழகம் தற்போது குடித்துவிட்டு நிதானமில்லாமல் இருப்பதால், மத்தியபிரதேசம், டெல்லி நிருபையா போன்ற பாலியல் வன்கொடுமை மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் குறைவே.
பணம் படைத்த அம்பானி குழுமம் இணையதளம் வசதிகொண்ட கைபேசி இலவசமாக வழங்கினால் அனைத்து ஆபாச இணையதளங்கள் சுதந்திரமாக சுற்றும் இந்தியாவில்,  பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடும். பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்.
 வெளிஉலகம் அறியாத குடும்ப பெண்கள் கட்டுபாடுகளை இழப்பர்.
கலாசாரம், பண்பாடு  சீரழியும். 
பெண்களை பெற்றவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு பெண் குழந்தைகளை கண்காணித்து பாதுகாக்க வேண்டும்.

முக்கிய குறிப்பு.
13 வயது நிரம்பிய சிறுவன் (!) கற்பழித்தால் கண்டிப்பாக அந்த பெண் கருத்தரிக்க வாய்ப்புண்டு . ஆனால் அந்த கேடுகெட்டவனுக்கு  கடும் தண்டனை குடுக்க நம் சட்டத்தில் இடமில்லை.ஏனெனில் அவன் மைனராம்.
பதினேட்டு வயது ஆகாதவனாம்.அவன் சிறுவனாம்.(!)

மக்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டிய காவல்துறையே ....
கார்பரேட் கம்பனி துணையை மட்டுமே நம்பி  பதவியை தக்கவைத்துக் கொள்ள மட்டுமே ஆட்சி நடத்தினால் சாதாரண மக்களின் வாழ்க்கை ?
இந்தியாவின் நிலை ? விழித்துக்கொள்ள வேண்டிய நேரமிது. 

தமிழக மக்களுக்கு ஒரு வேண்டுகோள்.

இனி வரும் தேர்தலில் ஜாதிக்காரன், கட்சி சின்னம், பாராமல் 
பொங்கல் விடுமுறையை தடைசெய்து மீண்டும் வாபஸ் பெற்றது, 
எண்ணற்ற விவசாயிகள் தற்கொலையை கண்டுகொள்ளாமல் போனது, தமிழகத்தை சுடுகாடாக மாற்ற நெடுவாசல் திட்டம்,
ஜல்லிக்கட்டு அறப்போராட்டம் நடத்திய மக்களை...,
நாட்டு மாட்டினங்களை பூண்டோடு அழிக்க முயற்சித்தது,
அனைத்தையும் மனதில் வைத்து வேட்பாளர்களை தகுதியறிந்து தேர்வு செய்யுங்கள். இனியாவது விடியலை நோக்கி பயணிப்போம்.

 

Monday, 10 July 2017

காலனும் நானும்சில நேரங்களில் இருக்கிறாரா, இல்லையா என்று சந்தேகம் தோன்றுகிறது.
எனை போல் நீங்களும் மௌனியா....
அனுபவிப்பவனுக்குத்தான் தெரியும் வலியின் கொடுமை.
வாழவேண்டும் என எத்தனையோ மானிட பதர்கள் 
துடியாய் துடிக்க 
திடீரென மாண்டுபோகின்றனர்.
உங்களிடம் வந்து சேர வேண்டும்
என துடிக்கும் எத்தனையோ பேர் 
இன்னமும் துடிதுடித்து வாழ்கின்றனர். 
எனைப்போல...

Thursday, 6 July 2017

சுமைதாங்கிஅன்னப்பறவை பாலையும், தண்ணீரையும் 
தனியே பிரித்து பாலைமட்டும் பருகுமாம்.
அது போல்,

சில குடும்ப தலைவர்கள் குடும்பத்தின் மொத்த துன்பத்தையும் 
தான் ஏற்றுக்கொண்டு,
மீதி மகிழ்ச்சியை தன் குடும்பத்திற்கு தந்து விடுகிறார்கள்.

Sunday, 4 June 2017

வறுமை


வருமானம் வரும்போது அதன் அருமை தெரியாமல், 
பிணந்தின்னி கழுகுகள் சுற்றி முகஸ்துதி பாட, 
அனைத்து செல்வத்தையும் தொலைத்தது 
கூட தப்பில்லை என தோன்றுகிறது.
கடன் இல்லாதவரை யாருமே செல்வந்தன்தான்.
சிறிதும் யோசிக்காமல் கடன் பெற்று விட்டால், 

கடன் வட்டியை குட்டியாக பெற்றுப்போடும்.
குட்டி வளர வளர குடும்பத்தில் நிம்மதி, மகிழ்ச்சி முற்றிலும் போய்விடும்.
பிறகு வருந்தி என்ன பலன்.

Sunday, 28 May 2017

நம்பிக்கை


நம்பிக்கைத்தான் வாழ்க்கையாம். 

ஆம் என்றாவது நாம் முன்னேறிவிடலாம் என்று சில பேர்

நடப்பது நடக்கட்டும் என்று சில பேர்.

முயற்சித்து பார்க்கலாமே என்று சில பேர். 

காலதேவன் வந்து அழைத்து செல்ல மாட்டானா? என பல பேர். 

இடைப்பட்ட காலத்தில் வாழ்க்கை முடிந்துபோகிறது.

நம்பிக்கைதான் வாழ்க்கையாம்.

Wednesday, 17 May 2017

நீயும் நானும் பிச்சைக்காரர்கள்தான்
நீயும் நானும் பிச்சைக்காரர்கள்தான்.

நம்புவது கொஞ்சம் கஷ்டம்தான்,

என்ன செய்வது உண்மை இதுதானே.

பணம்தானே நம் தேடல்...

உணர்வுகள் நமக்கு முக்கியமில்லையே..

கோடி கோடியாய் கொள்ளையடிக்கும் முதலாளிகூட்டம்.

அனைத்திலும் ஊழல், அரசியல்வாதிகள், அதிகாரிகள்.

நீதான் எல்லாம் தெரிந்த அறிவாளியாயிற்றே.

நீ என்னை குறைகூறுவாய். நானும் உனைபோலதான்.

நாட்டைப்பற்றி நமக்கென்ன கவலை.

இரண்டாயிரம் ரூபாய்க்கு நம் ஓட்டை விற்போம்.

ஊழலற்ற ஆட்சி என வாய்கிழிய பேசி, ஊழலே ஆட்சி செய்யும் கொடுமை.

இறுதியில் ஒன்று...

இனி இரண்டே இனம்

ஒன்று அடிமையினம்,

இரண்டு பணக்கார இனம்.

நடுத்தரமும் இல்லை.

ஏழையும் இல்லை.

நாங்கள் பிச்சைக்காரர்கள்.

Sunday, 16 April 2017

அன்பு

அன்பு ஒரு கொடிய சக்தி.
சமயத்தில் இன்பத்தை, மகிழ்ச்சியை வாரி வழங்கும்.
அதிகமானால் மிகுந்த துன்பத்தை தரும்.
விட்டு விலகினாலும் மிகுந்த துன்பத்தை தரும்.

Tuesday, 24 January 2017

ஆரோக்கியமான விஷயம்மார்ச் 1 முதல் வெளிநாட்டு பானங்கள் விற்பதை தமிழக வணிகர்கள் தடை செய்ய அதன் தலைமை அறிவித்திருப்பது தமிழகத்துக்கு ஆரோக்யமான விஷயம்.
விழிப்பது ஒருமுறை விழித்துவிட்டால் என்றுமே வீழ்ச்சி கிடையாது. குறுக்கில் எந்த பெட்டியும் இதை உடைக்காமல் நடைமுறைக்கு வந்தால் தமிழர்களாகிய நாமும் முழு ஒத்துழைப்பு தந்தால் தமிழகம் இந்தியாவில் முதலிடம் நோக்கி அசுரவேகத்தில் பயணிக்கும்.

ஜனநாயகம்


அடிமைத்தனம்  என்னும் துன்பம் 
ஒரு கட்டத்தில் தாங்க முடியாத நிலை வரும்போதும், 
சகிப்புத்தன்மை எல்லையை தொடும்போதும் 
நியாயமான போராட்டமாக உருவெடுக்கிறது. 
இறுதியாக மக்களிடம் போராட்ட குணம் மேலோங்குகிறது. 
நாடெங்கும் எங்கும் கலவரம். 
பொது சொத்து (அது அவர்களின் சொத்து) சூறையாடப்படுகிறது.
வன்முறை வெடிக்கிறது. கலவரம் செய்தவர்கள் சில,பல பேர் கொல்லப்பட்டும் போராட்டம் ஓயவில்லை.
முடிவில் மக்கள் கேட்டது அவர்களுக்கு கிடைக்கிறது அல்லது கிடைக்காமல் போகிறது. 

பிரிவினை மக்களுக்குள் இந்த நிலையில் விஸ்வரூபம் எடுக்கிறது (இதில் அரசியல் பங்கு அதிகம் உள்ளது).
மேற்கூறிய இவையெல்லாம் பல நாடுகளில் இன்றுவரை நடந்துவரும் சம்பவங்கள் நாம் இதுவரை கண்டு வருவது. 
ஆனால் தமிழர்களின் அறப்போராட்டம் உலகிற்கே முதல் எடுத்துக்காட்டாய் அமைந்தது. உலக தமிழர்கள் அனைவரும் அறப்போராட்ட களத்தில், துபாயில் இருப்பவர் அங்கிருந்தே,
அதுபோல் அனைத்து உலக நாடுகளில் இருக்கும், தமிழர்கள் அறப்போராட்டத்தை நடத்தி அறப்போராட்டம் என்னும் சக்தியின்  (அணுகுண்டை விட) வலிமையை  உலகிற்கு காட்டி விட்டனர்.

வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்னும் வாசகத்தை பார்க்க முடிந்தது.
என்னை பொறுத்தமட்டில் (ஒடுக்கப்பட்டவர்கள்) 

விழிப்பது ஒருமுறை விழித்துவிட்டால் என்றுமே வீழ்ச்சி கிடையாது
என்றே முழமையாக நம்புகிறேன்.இதையே ஜனங்களின் நாயகமாக (ஜனநாயகமாக) விழைகிறேன்.

Monday, 23 January 2017

ஜல்லிக்கட்டு23


அசோக சக்கரத்தில்
 மாபெரும் மாணவ, இளைஞர்கள், தமிழ் உணர்வாளர்கள்
அனைவரும் ஒற்றுமையாய் அறப்போராட்டத்தில் இரவும், பகலும், 7 நாட்கள் அறப்போராட்டத்தில் போராடி ஜல்லிக்கட்டு சட்டத்தை,  தமிழர் உரிமையை மீட்டு தந்தனர்.
இதில் ஜாதி, மதம் , பாலினம்  பாகுபாடெல்லாம்
மறித்து போய்
தமிழர் உரிமை என்ற ஒன்றே தலை தூக்கி நின்றது.
ஆறாம் நாள் இரவு முதல் பல தரப்பட்ட கட்சிகளை சேர்ந்த
அரசியல்வாதிகள் மற்றும் தீயசக்திகள்  சூழ்ச்சிகள் அரங்கேற தொடங்கின.
பாவம் இளைய சமுதாயம்.
சூதிலே அந்த சகுனியையே தோற்கடிக்கும் நம் அரசியல்வாதிகள் மற்றும் தீயசக்திகள்  எதிர்கொள்ள முன்பே முன்னெச்சரிக்கையுடன் திட்டமிடல் இருந்திருக்க வேண்டும்.
இனி வரும் காலங்களில் அறப்போராட்டத்தை
நேர்த்தியாக நடத்த ஒத்திகை பார்த்து தயாராகி விட்டார்கள்
தமிழ் மாணவ சமுதாயம்  என்றே சொல்லலாம்.
தேவைப்பட்டதை நேர்மையாகவும், அமைதியாகவும்,
பாதுகாப்பாகவும் (உலகிற்கே எடுத்துக்காட்டாய்) ஒற்றுமையாகவும்
அறப்போராட்டம் மூலம் மாணவ இளையசமுதாயம்
செய்து காட்டி வெற்றியும் கண்டு விட்டது 

என்பதே நிதர்சனமான உண்மை.

Wednesday, 18 January 2017

#ஜல்லிக்கட்டு

 

அன்று வருத்தத்துடன் பதிவிட்டேன் (Friday, 15 January 2016) .ஜல்லிக்கட்டு என்னும் தலைப்பில். 

இன்று எந்த கட்சியோ, இயக்கமோ தூண்டுதல் இல்லாத, 

அறவழிப் போராட்டம். 

உலகமே ஆதரவு தெரிவிக்கிறது. 

தமிழினம் எத்தனை காலம் பொறுமை காக்கும்.

பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு 

என்பதை இன்று கொதித்து கொந்தளிக்கும் இளைஞர்களால்,    

தமிழ் நாட்டில்  எழுச்சி பெற முடியும்

என்பதற்கு இதுவே முதல் உதாரணம்.

இனி பழங்கதை பேசி அரசியல் செய்யும் பழைய தந்திரமெல்லாம் செல்லாது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

Friday, 6 January 2017

வாழப்பிறந்தவர்கள் Vs சாகப்பிறந்தவர்கள்

வாழப்பிறந்தவர்கள்
பூர்வபுண்ணியம் பலமாக உள்ளவர்கள்.
அன்பான அமைதியான மனைவி மற்றும் மக்கள்.
கயவனை கூட அனுசரித்து காரியம் சாதிப்பர்.
செல்வத்திற்கு தங்குதடை வரவே வராது.
குறிப்பாக, அவர்களுக்கு மன உளைச்சலை தருபவரை
அருகிலேயே அண்ட விட மாட்டார்.
சாகப்பிறந்தவர்கள்
ஜோதிடனை  பார்க்க கூட வக்கிருக்காது.
எதனை செய்தாலும் முன்னேற விடாத,
சதா காலமும் நிந்திக்கும் துணைவி,
கயவன் என தெரிந்தும் அவன் காலில் விழாத குறையாக அவனிடம் யாசிப்பர்.
செல்வம் இவனிடம் வந்தவுடன் சென்றுவிடும்.தங்கவே தங்காது.
இவனை சுற்றிலும் வலுக்கட்டாயமாக இலவசமாக காரியம் சாதிக்கும் நரிகள் கூட்டம் எப்போதும்.இவனுக்கு தவிர்க்க தெரிந்தாலும், இவனால் தவிர்க்க முடியாது.
இருப்பவன் யாருக்கும் தரவேண்டும் என நினைக்க மாட்டான்.
இல்லாதவன் எல்லோருக்கும் தரவேண்டும் என எப்போதும் நினைப்பான்.


Wednesday, 21 December 2016

ஆபத்தானவர்கள்


தான் செய்யும் தவறுகளை என்றும் உணராத,
அதுவே சரியானது என்பர்.
அவர்கள் பாதையில் நாமும் பயணித்தால்,
இறுதிவரை முன்னேற்றம் கிடைக்காது.
பணம், மற்றும் (விலைமதிப்பில்லாத) நேரமும் வீண்.
எனக்கு வேறு வழியில்லை என்பது மடத்தனம்.
ஆராய்பவனுக்கு ஆயிரம் வழிகள்.

Thursday, 15 December 2016

கறுப்புப்பணம்


நாய்கள் எலும்புகளை பின்பு உண்ணலாம் 
என்று 
மண்ணில் புதைத்து வைக்குமாம். 
இப்போது 
அந்த நாய்களுக்கு பைசா பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டது.

Wednesday, 30 November 2016

வித்தியாசம்


சக்களத்திக்கும், சண்டாளிக்கும்
பணக்காரனுக்கு, ஏழைக்கும்
படித்தவனுக்கும், பாமரனுக்கும்
கற்பவனுக்கும், கற்பிப்பவனுக்கும்
கள்வனுக்கும், காவலனுக்கும்
பணம் என்பது ஒரு மெல்லிய
கோட்டில் கடந்து செல்கிறது.

Thursday, 3 November 2016

முழுமைமுழுமைக்கும், முடிவிற்கும் உள்ள வித்தியாசம்.

முடிவு என்பதை அடையும்போது 
அங்கு முழுமையடைந்து விட்டது.

முழுமையடைந்து விட்டது என்றபோது 
அங்கு முடிந்துவிட்டது என பொருள்.

Tuesday, 1 November 2016

துரோகம்

மனிதன் தனது ஆறாம் அறிவை பயன்படுத்தி
மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஈன செயல்.
( நம்ப வைத்து ஏமாற்றுவது ).
தூய்மையான எண்ணங்களுடன் 
இறைவனிடம் ஆத்மார்த்தமாக 
நம்மை அர்ப்பணிக்கும் போது 
நமக்கு தெரியாதவாறு,
பிறர் செய்த துரோகம் வலுவிழந்து போகும். 

Wednesday, 19 October 2016

புரிதல்


புரிதல் என்பது ஒரு வகையில் விட்டுக்கொடுத்து போதல்.
ஆணவம், அகம்பாவம்,தலைக்கனம் போன்றவற்றால் 
புரிதல் தடைபட்டு போகிறது.

விளைவு: பிரச்சனைமேல் பிரச்சனை.

Wednesday, 12 October 2016

நாட்டு நாய்


நன்றி என்ற சொல்லுக்கு தகுதியான மனிதனின் நண்பன்.
தமிழ் மொழி நன்கு புரிந்துகொள்ளும் நாலு கால் ஜீவன்.
சந்தர்ப்பம் கிடைத்தால் தன் உயிரையே கொடுக்கத் துணிந்த
விசுவாசத்தின் அடையாளம்.
அந்நிய நாட்டு கவர்ச்சி ஈர்ப்பால் மற்ற வெளிநாட்டு நாய்களை வளர்க்கும்
வறட்டு ஜம்ப மனித பதர்கள் .
நாங்கள் அதிகம் பெருகிவிட்டோம் என எங்களை எங்கள் இனத்தை வளர விடாமல் எங்களுக்கு கருத்தடை செய்து 
எங்கள் இனம் பெறுக விடாமல் அழிக்கும் அந்நிய சக்தியின் சதிவலை.
இந்நிலை நீடித்தால் எங்கள் இனம் முற்றிலும் அழிந்து போகும்.
 எங்கள் அருமை உணர்ந்த, அவர்கள் குடும்பத்தில் ஒருத்தராய் எங்கள் இனத்தை பாதுகாப்பது கிராமத்து மக்களே.
இறுதியாக ஒன்று...
உங்கள் பகுதியில் திரியும் எங்களுக்கு உணவிடுங்கள்.
எங்கள் இனத்தில் ஆணோ,பெண்ணோ, காது வெட்டு படாமல் இருந்தால் , (காது வெட்டுப்பட்டு இருந்தால் அதற்கு கருத்தடை செய்ததாக அர்த்தம்.)
தயவு செய்து அதன் கழுத்துக்கு ஒரு பட்டை(Belt) அணிவியுங்கள்.
கழுத்துப்பட்டை அணிந்த நாய்களை கருத்தடை செய்ய அதிகாரம் கிடையாது.

Thursday, 11 August 2016

விபரமானவன்
வினையாக தேனொழுக பேசுவான். பழகுவான்.

அவனை விபரமானவன் என சமுதாயம் கூறுகிறது.

அறுவடை செய்யும்போதுதான் தெரியும் 

அவன் எதை விதைத்தான் என்பதை...